தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Wednesday, April 9, 2014

மஸ்தூர் களப்பணியாளர் பதவி உயர்வு - 
CITU  மின்வாரியத்தை நிர்பந்திப்பதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் 

தினமணி செய்தி வெளியீடு - 09.04.2014 
dindmani E paper       




மஸ்தூர் ஊழியருக்கு பணி உயர்வு: சி.ஐ.டி.யூ. நிர்பந்திப்பதாக தேர்தல் ஆணையத்திடம் புகார்

First Published : 09 April 2014 03:07 AM IST
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் இச்சமயத்தில், மின்சார வாரிய மஸ்தூர் களப்பணியாளர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டுமென்று சி.ஐ.டி.யூ. சங்கம் நிர்வாகத்தை நிர்பந்திப்பதாகக் கூறி, தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கம்(கோவை மண்டலம்) சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இச்சங்கத்தினர், இது தொடர்பான புகார் மனு நகலை திருப்பூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் செவ்வாய்க்கிழமை அளித்தனர்.
அதன் விவரம்:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மஸ்தூர் களப்பணியாளர்களாக கடந்த 2008, 2009 ஆம் ஆண்டுகளில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு கள உதவியாளர்களாக பணி உயர்வு வழங்க சில அரசியல் கட்சி சார்ந்த தொழிற்சங்கங்கள் மின்சார வாரியத்தை நிர்பந்தித்து வருகின்றன. அதனடிப்படையில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மஸ்தூர் களப்பணியாளர்களுக்கு பணி உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், தொழிற்சங்கங்கள் நிர்ப்பந்தம் காரணமாக பொதுத்துறை நிறுவனமான மின்சார வாரியம் தவறாக செயல்படுவதாக கருத வேண்டியுள்ளது. மின்சார வாரியத்தின் தவறான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் திருப்பூர் வட்டத் தலைவர் என்.கார்த்திகேயன், செயலாளர் டி.சீனிவாசன் கூறியது:
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் இச்சமயத்தில் சி.ஐ.டி.யூ. சங்கம், மஸ்தூர் களப்பணியாளர்களுக்கு கள உதவியாளர்களாக பணி உயர்வு வழங்க வேண்டும் என மின்சார வாரியத்தை நிர்ப்பந்தித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் மின்சார வாரியத்தில் 21 ஆயிரம் மஸ்தூர் களப்பணியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு படிப்படியாக பணி உயர்வு வழங்கப்படுவது வழக்கம், தற்போது 4,600 பேருக்கு பணி உயர்வு வழங்க வாரியம் நடவடிக்கை எடுத்து, தமிழகத்தின் சில பகுதிகளில் மஸ்தூர் களப்பணியாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் பணி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதை காரணம் காட்டி, கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு, திருப்பூர், உடுமலை மின் பகிர்மான வட்டத்தில் உள்ள மொத்தம் 300 மஸ்தூர் களப்பணியாளர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யூ. சங்கம் மின்வாரிய நிர்வாகத்தை வாய்மொழியாக நிர்பந்தித்து வருகிறது.
சி.ஐ.டி.யூ. சங்கம் மூலமாக தேர்தல் சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் லாபம் பெற முயற்சிக்கிறது. ஊழியர்களுக்கு பணி உயர்வு என்பது நிர்வாக ரீதியான வழிமுறைகள் படியும், அதற்கான கால அவகாசத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும். இதை, சி.ஐ.டி.யூ. சங்கம் இத்தருணத்தில் நிர்ப்பந்திக்கக் கூடாது என்றனர்.