தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் திருப்பூர் வட்டம் அன்புடன் வரவேற்கிறது

Tuesday, January 14, 2014

Wednesday, January 1, 2014

தமிழ்நாடு மின் ஊழியர்களுக்கு 7 சதவீத ஊதிய உயர்வு, முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு - சுமார் 81 ஆயிரம் பணியாளர்கள் பயன்பெறுவர் என்றும் தகவல்


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 7 சதவீத ஊதிய உயர்வை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்படி, ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 700 ரூபாய் இருந்து 13 ஆயிரத்து 160 ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என்றும், இதன் மூலம் 80 ஆயிரத்து 980 பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளும் பயன்பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும்; சுமுகமான தொழில் உறவுகள் மேம்பட வேண்டும் என்பதிலும்; தொழிலாளர் சட்டதிட்டங்களின்படி அவர்களுக்குரிய பயன்கள் கிடைக்கப் பெற வேண்டும் என்பதிலும்; புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதிலும் தமது தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளார். 

பணியாளர்களுக்கு உரிய சலுகைகளை வழங்குவதில் அரசு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள தமது தலைமையிலான அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அனைத்துச் சலுகைகளையும் காலத்தே அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அந்த வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய மாற்றம் மற்றும் வேலைப்பளு ஒப்பந்தம் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதி அன்று முடிவடைந்த சூழ்நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தினை ஏற்படுத்தும் வகையில், ஊதிய மாற்றக் குழு ஒன்றினை அமைக்க தாம் ஆணையிட்டுள்ளதாகவும், அதன்படி ஊதிய மாற்றக் குழு ஒன்று கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி அன்று அமைக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். 

இந்த ஊதிய மாற்றக் குழு, 15 தொழிற்சங்கங்களுடன் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது - இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது ஏற்பட்ட கருத்து பரிமாற்றங்களைக் கருத்தில் கொண்டும், ஊதிய மாற்றக் குழுவின் பரிந்துரைகளை கணக்கில் கொண்டும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஊதிய உயர்வினை அறிவிப்பதில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 

அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் தற்போதைய ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்வு வழங்கப்படும் - இந்த ஏழு விழுக்காடு ஊதிய உயர்வு காரணமாக, ஒவ்வொரு தொழிலாளருக்கும் மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் 700 ரூபாயும், அதிகபட்சம் 13 ஆயிரத்து 160 ரூபாயும் ஊதிய உயர்வு கிடைக்கும். 

பத்து ஆண்டு அல்லது அதற்கு மேல் பணியாற்றியவர்களுக்கு பணிக்கால பயனாக ஓர் ஆண்டு ஊதிய உயர்வு, அதாவது 3 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படும். 

தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலையைப் பொறுத்த வரையில், அரசாணை எண் 237, நிதித் துறை நாள் கடந்த ஆண்டு ஜுலை மாதத்தில் 22 ஆம் தேதியின்படி தமிழக அரசு அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதிய உயர்வு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் அளிக்கப்படும். காலமுறை ஊதியத்தில், அதிகபட்ச ஊதிய நிலையை எட்டிய போதும், ஆண்டுக்கொரு முறை தேக்க நிலை ஊதிய உயர்வு வழங்கப்படும். 

தற்போதுள்ள ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியம் மாற்றமின்றி தொடர்ந்து வழங்கப்படும். தற்போதுள்ள படிகள் மற்றும் சிறப்பு ஊதியம் மாற்றமின்றி தொடர்ந்து வழங்கப்படும். தற்போதுள்ள 3 சதவீதம் ஆண்டு ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும். 

பணியில் சேர்பவர்களுக்கான அதிகபட்ச பயிற்சி காலம் ஓராண்டாக இருக்கும் - பயிற்சி காலத்தில் தொகுப்பு ஊதியம் வழங்கப்படும்- தற்போது ஓராண்டிற்கு குறைவாக பயிற்சி காலம் உள்ள பதவிகளுக்கு தற்போது உள்ள நிலையே தொடரும் - பயிற்சி காலம் முடிந்ததும் காலமுறை ஊதியம் வழங்கப்படும். இது ஒப்பந்தத் தேதியிலிருந்து செயல்பாட்டுக்கு வரும். 

இந்த ஊதிய உயர்வு கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் - கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 25 மாதங்களுக்கான ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ரொக்கமாக இரண்டு தவணைகளில் வழங்கப்படும் - முதல் தவணை ஜனவரி 2014-லும், இரண்டாவது தவணை ஏப்ரல் 2014-லும் வழங்கப்படும். இந்த ஊதிய மாற்ற ஒப்பந்தம் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நான்கு ஆண்டுகள் அமலில் இருக்கும். இந்த ஊதிய மாற்ற ஒப்பந்தத்தின் மூலம் 70 ஆயிரத்து 820 பணியாளர்கள் மற்றும் 10 ஆயிரத்து 160 அதிகாரிகள் என மொத்தம் 80 ஆயிரத்து 980 பணியாளர்கள் பயன் பெறுவர். 

இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு ஆண்டொன்றுக்கு 252 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் - ஊதிய மாற்ற நிலுவை தொகை வழங்கும் வகையில் 525 கோடி ரூபாய் செலவு ஏற்படும் - இச்செலவினங்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிதியிலிருந்தே மேற்கொள்ளப்படும். தமது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கையின் மூலம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு, அவர்கள் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும், மனமகிழ்ச்சியுடனும் தங்கள் கடமைகளை ஆற்ற வழிவகுக்கும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

                                              இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 

 


             
                 2014 ஆம் ஆண்டு இனிதாய்  அமைந்து எல்லா வளங்களும் பெற்று சிறப்புற்று வாழ வாழ்த்தி மகிழ்கிறோம்